மஹாபெரியவாளின் பாதையிலே - 8
உறவுகள்- தாயின் மஹிமை
ஒருவனின் பிறவியில் அமையும் உறவுகள் எல்லாமே நாம் உருவாக்கிக்கொள்வதல்ல. நம்முடைய கர்மாக்களுக்கு தகுந்தாற்போல் இறைவன் ஒரு உறவை கொடுத்து “வாழ்ந்துவிட்டு வா” என்று நம்மை இந்த பூமியில் பிறக்க வைக்கிறான்.
முக்கியமாக, பெற்றோர் குழந்தைகள் உறவு இறைவன் அமைத்து கொடுப்பது. இறைவன் கொடுத்த உறவை கொண்டாடாவிட்டாலும் கேலிக்கூத்தாக்காமல் வாழ்ந்து விட்டு சென்றால் இறைவனும் மகிழ்வான். அடுத்த பிறவியில் இன்னும் ஒரு நல்ல சூழ்நிலையில் குழந்தையாக பிறக்க வைப்பான்.
நீங்கள் குழந்தையாக இருந்த பொழுது நெஞ்சில் உதைத்தாலும் அடித்தாலும் குழந்தைக்கு கை வலிக்குமே என்று அடித்த கையை எடுத்து முத்தமிட்டு அணைத்து கொள்வார்கள் உங்கள் பெற்றோர்கள்.
உங்களுக்கு வேண்டியது அனைத்தையும் நீங்கள் அடையும் பொழுது அப்பா அம்மா என்ற இரண்டு மெழுகு வர்த்திகள் எரிந்து கரைந்து தான் உங்களுக்கு அந்த பொருள் கிடைக்கிறது. இதை மறந்து விடாதீர்கள்
இதே போல் நீங்கள் படித்து பெரியவனாகி ஒரு பெற்றோரின் நிலைக்கு உயரும் பொழுது உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு குழந்தையாக மாறி விடுகிறார்கள். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது இதோ இதுதான்.
ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் உங்கள் பெற்றோர்களை நமஸ்கரித்து விட்டு பிறகு நாளை துவங்குங்கள். எந்த பிரச்சனைகளும் உங்களை நெருங்காது.
நீங்கள் வேலையில் இருந்தாலும் ஒரு பத்து நிமிடமாவது தொலை பேசியில் உங்கள் பெற்றோர்களை அழைத்து சாப்பிட்டார்களா என்று உண்மையான உணர்வுகளுடன் கேளுங்கள்.
உங்கள் பெற்றோர்கள் உங்களிடம் வேறு ஏதையும் எதிர்பார்ப்பது இல்லை. உங்கள் பாசத்தையும் அன்பயும் மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். இதை கூட நீங்கள் கொடுக்க மறுத்தால் நீங்கள் எவ்வளவு கொடுமைக்காரர்கள் என்று நினைத்து பாருங்கள்.
திருமணத்திற்கு பிறகு அம்மா அப்பா வயிற்றை காயப்போட்டுவிட்டு மனைவியுடன் சேர்ந்து உங்கள் வயிற்றை நிரப்பி கொண்டிருந்தால் அடுத்த பிறவியில் ஆதரவற்ற அனாதையாக பிறந்து தாய்ப்பாலுக்குக்கூட பிச்சை எடுத்து வாழ்வீர்கள். வாழும் நாட்கள் முழுவதும் மரணத்தை தழுவ ஏங்கி தவிப்பீர்கள்..
இந்த மாதிரி கொடூரர்களுக்கு இறைவன் கொடுக்கும் தண்டனை உங்களிடம் இருந்து மரணத்தை பறித்து விடுவான். உங்கள் குழந்தைகளும் உங்களுக்கு இதே தண்டனையயை கொடுத்து விடுவார்கள். உங்கள் தாய் நல்லவளோ கெட்டவளோ எனக்கு தெரியாது. எது எப்படி இருந்தாலும் தாய் தாய்தான். உன்னை சுமந்து பெற்றவள்.இந்த பாவம் உங்கள் குடும்பத்தின் மேலும் குழந்தைகள் மேலும் விழுந்து விடும். பணம் காசு சேர்த்து என்ன பயன். பாவத்தை தயவு செய்து சேர்க்காதீர்கள்.
நீங்கள் செய்யும் அனைத்தையும் உங்கள் குழந்தைகள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். நாளை உங்கள் குழந்தைகள் உங்களை இதே போல் பார்த்துக்கொள்ளுவார்கள்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உங்கள் பெற்றோர்களை மனைவியுடன் குழந்தைகளோடு கோவிலுக்கோ அல்லது ஆன்மீக கூட்டங்களுக்கோ அழைத்து செல்லுங்கள். அப்பொழுது பெற்றோர்களுக்கு என்ன தேவையோ அதை உங்கள் மனைவியை வாங்கி கொடுக்க சொல்லுங்கள். உறவுகள் பலப்படும். மேம்படும்.
உங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுப்பதற்கு முன்னால் நீங்கள் அதுபோல் வாழ்ந்து காட்டுங்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவுகளிடம் பழகிப்பாருங்கள். உறவுகள் நீடித்து நிலைத்து நிற்கும். ஒரு பத்து நாட்களுக்கு இது போல் வாழ்ந்து பாருங்கள். உங்கள் மேல் உங்களுக்கே ஒரு மரியாதை ஏற்படும்.
உங்கள் நலன் மட்டுமே நாடும்
GR மாமா
0 Comments